மஹாருத்ரம்
‘நமசிவாய’ என்னும் சொல்லை ஐந்தெழுத்து மந்திரம் என்றும், பஞ்சாட்சரம் என்றும் சொல்வது வழக்கம். இந்த மந்திரத்தை அறியாத இந்துக்களே இல்லை என்று சொல்லாம். அனைவரும் அறிந்த இந்த மகாமந்திரம் -- பழங்காலம் தொட்டே வழங்கிவரும் மந்திரம் -- சிவபெருமானைப் போற்றிவணங்கும் இந்த மந்திரம் -- எங்கு முதன்முதலாகச் சொல்லப்படுகிறது என்பது அறிய நமக்கு ஆவலாக இருக்கிறதல்லவா?
‘நமசிவாய’ மந்திரம் ஏழு காண்டங்கள் அடங்கிய கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையில், நான்காம் காண்டத்தில் ருத்ரத்தில் எட்டாவது அநுவாகத்தில் வருகிறது. ருத்திரம் நமகம், சமகம் என்று இரண்டு பிரிவுகளை உடையது. ஒவ்வொன்றிலும் பதினொன்று அநுவாகங்கள் [துதிகள்] இருக்கின்றன.
சிவபெருமானின் ஒரு அம்சமான ருத்திரனைக் குறித்து இத்துதிகள் பாடப்படுவதால் இதற்கு ருத்ரம் என்று பெயர். ருத்ரத்திற்கு குத்ரப் ப்ரஸ்’னம், சதாருத்ரீயம், ருத்ராத்யாயம் என்ற மற்ற பெயர்களும் உள்ளன.
ருத்ர சமகத்தில் சிவபெருமானின் பலவேறு அம்சங்களும், பெயர்களும் ருத்ரத்தில் சொல்லப்படுகின்றன. நமகத்தில் உலகத்தில் உள்ள அனைவருக்கும் பலவிதமான நலங்களும், செல்வங்களும் வேண்டப்படுகின்றன. இப்படிப்பட்ட, மகிமைபொருந்திய ருத்ரத்தை ஜபிப்பது பல நன்மைகளைத் தருகிறது. இந்த ருத்ரஜபத்தை வேதமுறைப்படி ஹோமம் செய்து ஜபிப்பதையே ருத்ரயக்ஞம் என்று சொல்லப்படுகிறது.
யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம்பெற்ற பஸ்மாசுரனை அழிக்க மோகினியாக வேடம்தரித்துவந்த விஷ்ணு, அந்த அரக்கனை, அவன் தன் தலையிலேயே கைவைக்கும்படி செய்து, அவனை அழித்தபின்னர், தாண்டவ நடனமாடி, உலகநன்மைக்காக ருத்ரயக்ஞம் செய்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன. விஷ்ணு ருத்ரயக்ஞத்தைச் செய்த இடம் பஞ்சபூத ஸ்தலங்கலில் ஒன்றான காளஹஸ்தியாகும்.
திரயோதசியன்று சூரிய அஸ்தமனத்திற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பிலிருந்து, அஸ்தமனம் ஆகி ஒன்றரை மணி நேரம்வரை இருக்கும் காலத்தைப் பிரதோஷகாலம் அல்லது பிரதோஷம் என்று சொல்வார்கள். இந்தநேரம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நேரம். அச்சமயத்தில் ருத்ரத்தை ஜபிப்பது சிவபெருமானின் அருளைப்பெற்றுத்தரும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
பதினோரு ரிக்வித்துகள் [ருத்ரத்தை முறைப்படி உச்சரித்து ஜபிக்கக்கூடியவர்கள்] பதினோரு தடவை ருத்ரத்தை ஜபம் செய்வது [மொத்தம் நூற்று இருபத்தொன்று தடவைகள்], ஏகாதச ருத்ரம் என்று சொல்லப்படுகிறது. அறுபது ஆண்டு நிறையும் காலத்திலும், மற்ற சிறப்பான நாள்களிலும் ஏகாதச ருத்ரம் ஜபித்து, ருத்ரயக்ஞம் செய்வது நீண்ட ஆயுளையும், நோய்நொடியற்ற வாழ்வையும் தருகிறது.
ருத்ரத்தை நூற்று இருபத்தொன்று ரிக்வித்துகள் பதினோருமுறை ஜபித்து [மொத்தம் 1321 தடவைகள்], வேதமுறைப்படி ஹோமம் செய்து ருத்ரயக்ஞம் செய்வதை மஹாருத்ரம் என்று சொல்கிறார்கள். இது உலகநன்மையையும், நாட்டிற்கு சுபிட்சத்தையும், செழிப்பையும் தருகிறது.
மஹாருத்ரம் நடத்தும் முறை:
சங்கல்பம் செய்தபின்னர், மஹாருத்ரத்தைத் துவங்குமுன்னர், சிவபெருமானையும், மற்ற தெய்வங்களையும், அவரருக்குரிய மந்திரக்களைச் சொல்லி, புனிதநீர் நிறம்பிய கலசங்களில் ஆவாஹனம் செய்கிறார்கள். இது சைவாகமம் கற்ற சிவாச்சாரியார்களால் ஆகமமுறைப்படி செய்யப்படுகிறது.
அது நடந்தேறியதும், சிவபெருமானை மஹாருத்ரம் ஓதப்படும் சமயத்தில் நமக்குள் வந்திருக்கும்படி இறைஞ்சித் துதித்து, மஹாநியாசம் ஓதப்படுகிறது. அதன்பின்னர், முதல் தடவை, நமகத்திலுள்ள பதினோரு அநுவாகங்களும், சமகத்திலுள்ள முதல் அநுவாகமும் ஓதப்படுகிறது. அப்பொழுது சிவபெருமானுக்கு பல உபசாரங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. அடுத்த தடவை நமகம் முழுவதும், சமகத்தின் இரண்டாம் அநுவாகமும் ஓதப்பட்டு, பூஜை தொடர்கிறது. இவ்வாறே பதினொரு தடவைகள் நமகமும், சமகமும் ஓதி பூஜை நிறைவேறுகிறது.
ருத்ர ஹோமத்தில் நெய், சமித்துகளால் [பல புனிதமான மரத்தின் பட்டைகள்] அக்னிபகவானுக்கு ஆகுதி கொடுக்கப்படுகிறது. இறுதியில் பூர்ணாஹுதியும், வசுதாராவும் செய்யப்படுகிறது. இச்சமயத்தில் சமகத்தின் பதினோரு அநுவாகங்களும் ஓதப்பட்டு, ருத்ரயக்ஞம் நிறைவுபெறுகிறது.
இவ்வளவு சக்திவாய்ந்த, பெருமைபொருந்திய, நன்மைபயக்கக்கூடிய மாபெரும் வேதவேள்வியான மஹாருத்ரம் அடிக்கடி நடப்பதில்லை. எப்பொழுதாவது ஒருமுறைதான் நடைபெறுகிறது. அதிலும், மஹாருத்ரம் நடக்கும்பொழுது அதில் கலந்துகொள்வதற்கான, நேரில் கண்டு, ருத்ரஜபத்தைக் காதுகளில் கேட்டு, மனதால் தூய்மையுற்று, அதன் நற்பயங்களைப்பெறும் வாய்ப்பும் மிகக்குறைவே!
எனவே, மஹாருத்ரம் எங்கு நடந்தாலும், அங்குசென்று, சிவபெருமானின் அருளைப் பெறுவோமாக!