Tamizh New Year and Vishu Celebrations

துர்முகி தமிழ்ப் புத்தாண்டு/விஷு திருநாள்

ஹிந்து மதத்தில் சூரியன், சந்திரன் இவ்விரண்டு கிரகங்களின் சுழற்சியைவைத்துக் கணக்கிட்டு, இரண்டுவிதமாக புத்தாண்டு கணிக்கப்படுகிறது.  சந்திரனை வைத்துக் கணிக்கப்படும் புத்தாண்டை யுகாதி என்கிறார்கள்.  ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.  சூரியன் மேஷராசியில் பிரவேசிக்கும் தினத்தை தமிழர்களும், மலையாளிகளும் தமிழ்ப்புத்தாண்டு என்றும், விஷு என்றும் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில், ஒரிஸா, வங்காளம், அஸ்ஸாம், பஞ்சாப் முதலிய மாகாணங்களிலும், இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்களாலும், தாய்லாந்திலும் தமிழ்ப்புத்தாண்டு நாளே புத்தாண்டுதினமாகக் கொண்டாடப்படுகிறது.

  துர்முகி ஆண்டு, அரிசோனா நேரப்படி, ஏப்ரல் 13ம் தேதி, காலை 6:00 மணிக்கு, திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறக்கிறது. இது சித்திரை முதல் தேதியாகும்.

துர்முகி வருட வெண்பா

மிக்கான துர்முகியில் வேளாண்மை யேறுமே

தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான

குச்சர தேசத்திற் குறைதீரவே விளையும்

அச்சமில்லை வெள்ளையரிதாம்

-     இடைக்காடர் சித்தர் பாடல்

இந்தத் துர்முகி வருஷத்திற்கு குருபகவான் [வியாழன்/பிரகஸ்பதி] அதிபதியாக இருக்கிறார்.  எனவே நாட்டில் பயம் இருக்காது.  வருஷத்தின் பின்பகுதியில் நல்லமழை பெய்து, தானியங்கள் விளைந்து, தேசம் சுபிட்சமாக இருக்கும். வெள்ளைநிறப் பொருள்கள் குறையும்.

புத்தாண்டின்போது, காலையில் எழுந்து மங்களநீராடி, புத்தாடைகள் அணிந்து, கோவிலுக்குச் சென்று வழிபடுவது முழுவருஷமும் நல்லபலன்களைக் கொடுக்கும்.

அரிசோனா மஹாகணபதி கோவிலில் இந்தநாளைக் கொண்டாடும் வகையில் 13ம் தேதி மாலை பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்யப்படும்.  16ம்தேதியன்று கோவிலில் தமிழ்ப்புத்தாண்டும், விஷுக்கனி காணும் நிகழ்ச்சியும் நடைபெறும். காலை 10:30 மணிக்கு சமஷ்டி சங்கல்பம் செய்து, ஐயப்பனுக்கு அபிஷேகம், ஆராதனை, படிப்பாட்டு இவைகளுடன் வழிபாடு நடத்தப்படும்.  அனைவரும் வந்திருந்து ஐயப்பனின் அருள்பெற்று, விஷுக்கனியைத் தரிசித்து, அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, அருளடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.