ஓம் நமோ வெங்கடேசாய
உதயாஸ்தமன சேவை
விளக்கமும் பக்தர்களின் பங்கெடுப்பும்
திருமலையில் செய்வதுபோல சேவை செய்யப்படும்.
1. சுப்பிரபாத சேவை: காலை 8 மணி
a. பூபாள இராகத்தில் நாதஸ்வர இசை முழங்க, அர்ச்சகர்கள் முன்னால் சுப்பிரபாதம் ஓத, பக்தர்கள் அவர்களுடன் தொடர்ந்து ஓத, சேவை துவங்குகிறது.
b. வெங்கடேஸ்வரரின் விஸ்வரூப தரிசனத்துடனும், நவநீத ஹாரத்தியுடனும் சேவை நிறைபெறுகிறது.
c. பக்தர்களின் பங்கு: சுப்பிரபாதம் ஓதுதல், விஸ்வரூப தரிசனம், அர்ச்சகரிகளிடமிருந்து சிறப்பு ஆசிகள்.
d. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த வெண்ணை, தயிர்சாதம், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
2. தொம்மாலை [ஸ்ரீநிவாசருக்குத் தோள்வரை தொங்கும் மாலை] சேவை: காலை 8:30 மணி
a. ஒரு பிரம்மசாரி தொம்மாலைகள் அடங்கிய கூடையைத் தலைமீதுவைத்து எடுத்துக்கொண்டு கோவில் பிரகாரத்தைச் சுற்றிவருவார். அவர்பின்னால் வரும் மற்றொரு பிரம்மசாரி உபயதாரர்களுக்கு ஒவ்வொரு மாலையாக எடுத்துத் தருவார். அவர்கள் தங்கள் தலைமீது அம்மாலைகளை வைத்துக் கொண்டுவந்து அர்ச்சகர்களிடம் தருவார்கள். கடைசியில் மாலைகளை அர்ச்சகர்கள் பெற்றுக்கொண்டு மீதிப்பூஜையை முடிப்பார்கள்.
b. அர்ச்சகர்கள் திருப்பாவை ஓதி, மாலைகளைச் சாற்றி, மங்கல ஆரத்தி காட்டுவதுடன் சேவை நிறைவுபெறுகிறது.
c. பக்தர்களின் பங்கு: தொம்மாலைகளைச் சுமந்துவந்து ஸ்ரீநிவாசருக்குச் சமர்ப்பித்தல்; அர்ச்சகரிகளிடமிருந்து சிறப்பு ஆசிகள்.
d. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த சாம்பார்சாதம், கற்பூரம், அக்ஷதை, பூக்கள், குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
3. கொலு[வு] சேவை: காலை 9 மணி: [உத்சவமூர்த்திக்கு அபிஷேகம்]:
a. போகஸ்ரீநிவாசருக்கு [உத்சவமூர்த்தி] அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தப்படுத்தப்படும்.
b. அர்ச்சகர்கள் திருவாத வஸ்திரத்தை [கற்பூரத்துகள்கள் கலந்த பட்டுத்துணி] ஒரு தட்டில்வைத்து உபயதாரர்களுக்குக் காட்டுவார்கள். உபயதாரர்கள் திருவாத வஸ்திரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்வார்கள். வேதமந்திரங்களை முழங்கியபடியே அவ்வஸ்திரத்தை அர்ச்சகர்கள் பாலாஜிக்குச் சமர்ப்பிப்பார்கள். அதன்பின்னர், அர்ச்சகர்கள் வெங்கடேஸ்வரருக்குப் பஞ்சாங்கத்தை வாசிப்பார்கள். பொருளாளர் [Treasurer] சிரத்தையுடனும், பக்தியுடனும் கடவுளுக்குக் கோவில் வரவு-செலவுக் கணக்கை எடுத்துச் சொல்வார்கள்.
c. பக்தர்களின் பங்கு: திருவாத வஸ்திரங்களையும், ஸ்ரீவாசர் பாதங்களையும் அர்ச்சகர்களிடம் கொடுத்து ஆசி பெறுதல்.
d. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த கேசரி, கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
4. திரு ஆராதனை: காலை 9:30 மணி
a. இந்தச் சேவை பாஞ்சராத்திர ஆகமப்படி அர்ச்சகர்களால் நடத்தப்படும்.
5. அஷ்டதள பாதபத்ம ஆராதனை [தங்க புஷ்ப அர்ச்சனை]: காலை 11 மணி
a. அர்ச்சகர்கள் உபயதாரர்களிடம் தங்கபுஷ்பத்தை எடுத்துச்சென்று, அவர்களுடைய பெயர்கள், நட்சத்திரம், கோத்திரம் இவற்றைப்பெற்று, அந்தத் தங்கபுஷ்பங்களால் வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சனைசெய்தபின் மங்கல ஆரத்தி காட்டப்படும்.
b. பக்தர்களின் பங்கு: சேவையில் பங்கெடுத்து, அர்ச்சகர்களிடம் சிறப்பு ஆசி பெறுதல்.
c. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த பாயசம், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
6. வெங்கடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்: காலை 11:30 மணி
a. மூலமூர்த்திக்கு [வெங்கடேஸ்வரின் கற்சிலை] சிறப்பு ஒன்பது கலச அபிஷேகம் செய்யப்படும். மகாகும்பம் அர்ச்சகர்களால் உபயதாரர்களுக்கு எடுத்துச்செல்லப்படும். அவர்கள் மகாகும்பத்தைத்தொட்டு, ஆசிபெறுவார்கள். மகாகும்பத்திலிருக்கும் புனிதநீர் ஸஹஸ்ரதாரை வாயிலாக வேதகோஷங்களுடன் பாலாஜிக்கு அபிஷேகம் செய்யப்படும்.
b. பக்தர்களின் பங்கு: தங்களிடம் உள்ள சிறிய தங்கநகைகளை ஸஹஸ்ரதாரை அபிஷேகத்திற்குக் கொடுத்தல்; இந்நகைகள் அபிஷேகத்திற்குப்பிறகு திரும்பப் பெறுதல்; அர்ச்சகர்களிடம் சிறப்பு ஆசி பெறுதல்.
c. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த வெண்பொங்கல், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
7. வஸ்திர அலங்கார சேவையும், சாற்றுமுறையும்: பிற்பகல் 1 மணி:
a. உபயதாரர்கள் திருமலையிலிருந்து பாலாஜிக்குச் சாத்தும் வஸ்திரங்களைத் தொட்டு, ஆசிகள் வாங்குவார்கள். அர்ச்சகர்கள் அவற்றை வெங்கடேஸ்வரருக்குச் சாற்றுவார்கள்.
b. அர்ச்சகர்கள் திவ்யப்பிரபந்தத்திலிருந்து சாற்றுமுறைப் பாக்களை[பாட்டுகளை] ஓதி சேவையை நிறைவுசெய்வார்கள்.
c. பக்தர்களின் பங்கு: சேவையில் பங்குபெற்று, அர்ச்சகர்களிடம் சிறப்பு ஆசி பெறுதல்.
d. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த தோசை அல்லது மற்ற பிரசாதம், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
8. ஸ்ரீ வெங்கடேஸ்வர கல்யாண உத்சவம்: பிற்பகல் 2:30 மணி:
a. அர்ச்சகர்கள் உபயதாரர்களுக்கு காப்புக்கயிறு [ரட்சை] கட்டி, மகாசங்கல்பம் செய்துவைத்து ஸ்ரீநிவாசரின் பாதங்களை ஒரு தட்டில் அளிப்பார்கள்.
b. உபயதாரர்கள் அவற்றைப் பாலாலும், தண்ணீராலும் கழுவுவார்கள்.
c. கல்யாண வைபவத்தின்போது அர்ச்சகர்கள் உத்சவருக்கும், உபயதாரர்களுக்கும் தாம்பூலமும், ஸ்ரீநிவாச சடாரியும் அளிப்பார்கள்; மங்கல ஆரத்தியுடன் கல்யாண உத்சவம் நிறைவுபெறுகிறது.
d. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த லட்டு, சர்க்கரைப்பொங்கல், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
9. ரத உத்சவம்: மாலை 4:30 மணி:
a. பக்தர்கள் ஸ்ரீநிவாசரின் ரதத்தை ஊர்வலமாக இழுத்துச் செல்வார்கள்.
b. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த மிளகுப்பொங்கல், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
10. திருப்பாவை வட சேவை: மாலை 5:30 மணி:
a. அர்ச்சகர்கள் நாராயண உபநிஷத்தை ஓதியபடி, பாலாஜியின் முன்னால் புளியோதரை பிரசாதத்தைவைத்து அலங்கரிப்பார்கள். நட்சத்திர ஆரத்தியுடன் சேவை நிறைவுபெறும்.
b. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த புளியோதரை, கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
11. ஆயிரவிளக்கு அலங்கார சேவை [ஸஹஸ்ரதீப அலங்காரம்]: மாலை 6 மணி:
a. நாதஸ்வர இசை ஒலிக்க, அர்ச்சகர்கள் ஸ்ரீநிவாச கத்யம் ஓத, அண்ணமாசார்ய சங்கீர்த்தனைகளும், விசேஷ வேதஸ்வஸ்திகளும் பாடப்படும்.
b. கும்ப ஆரத்தி, பஞ்சமுக ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகள் காட்டப்படும்.
c. பக்தர்கள் ஆரத்திக்கு விளக்கேற்றல்.
d. உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த சேமியா பாயசம், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.
12. ஸ்ரீநிவாச ஏகாந்த சேவை: இரவு 8 மணி:
a. அர்ச்சகர்கள் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற உலர்ந்த பழங்களால் பாலாஜிக்கு அர்ச்சனை செய்வார்கள்; ஸ்ரீநிவாசரை ஊஞ்சலில்வைத்து அண்ணமாசாரியரின் ஜோல சங்கீர்த்தனம் [தாலாட்டு] பாடி, மகாமங்கல ஆரத்தி காண்பித்து உறங்கவைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் அளித்து உதயாஸ்தமன சேவை நிறைவுசெய்யப்படும்.
ஸ்ரீநிவாசர் காப்பாற்றுவாராக! எல்லா மக்களும் சுகமடைவார்களாக!! உலகுயிர்கள் அனைத்தும் சுகமாக வாழ்வதாக!!!